Monday, November 14, 2016

                               பல்லவி
சிறுபிரிவொன்று கேட்டேன் பிரிவதற்கு முன்பே
பெரும்பிரிவை தந்தாய் ஏனடா ?
சுகபிரிவொன்று கேட்டேன் பெரும்துயரை  அன்றோ
நெஞ்சிலேற்றி வைத்தாய் நீயடா .....
பிரிவு சிறிய வலியல்ல பிரளயவலி
உனக்கு தந்து நானே பெற்றேன் பாரடா......


                                     சரணம்-1
நள்ளிரவு நிலவும் கண்கள் கசக்கும்வரை பேசிக்கொண்டிருந்தோம் -இன்றோ
தூக்கம் இல்லை நீயும் இல்லை
உடைந்து விழுந்ததே வெண்ணிலவு....

உடைந்த நிலவின் ஒவ்வொரு துண்டிலும் உடையாத உன்முகம்
புலரும் காலையில் சுருள்முடி மார்பினில் சாய்ந்தழ என்தவம்......

பாலை நிலத்தில் பயணம் போகும் வெண்ணிலவு -உடல்
களைத்து இளைக்கும் நெடுந்தொலைவு போல இவ்விரவு ....

ஆழக் கடலில் கரையை தேடும் சிறுபடகு-அது
அலைந்து அடையும் புல்தரையை போல உன்வரவு...

காதலின் சுவையை கண்ணீரில் அறிந்தேன்
இமைபொழுதும் இனி உன்னை பிரியேன்
பிரிவே பிரிவே பிரிவேன் உனையே.. ...

                                     சரணம்-2
நேற்றுவரை அலைபேசியில் விரல்ரேகை தேய்ந்தபோதும் கதைத்திருந்தோம்-ஒரு
ஸ்மைலியில்லை கடுப்பியில்லை
விழிநீரில் கன்னக்குழி நிறைகின்றதே ...

மெல்ல நிலவை விழுங்கும் இரவென தின்னும் உன்முகம்
கொள்ளை விரகக் கொடும்பகை வெல்ல இல்லை மனஉரம் ....

கோபக்குமிழிகள் உடைத்து போகும் பனி இரவு -உந்தன்
வெறுப்பு வார்த்தையை விரும்ப சொல்லுது என்செய்வேன்....

சினத்தை உமிழ்ந்து என்னை வதைத்த உன் உதடு-எந்தன்
முத்தம் வைத்து வைத்து திருந்த சொல்வேன் என்செய்வாய் ....

நாளையுன் விடியல் என்முத்ததில் துவங்கும்
மாலையின் முடிவில் நம் யுத்தத்தின் முடிவும்
பிரியேன் பிரியேன் இனிஉன்னை பிரியேன் .

No comments:

Post a Comment