Tuesday, November 29, 2016

                   பல்லவி
கண்ணாடி நெஞ்சத்தில் கல்லெறிந்து போ
கொஞ்சாத கோபத்தில் சொல்லெறிந்து போ
மின்சார கம்பத்தில் கட்டி வைத்துப்  போ
செல்லாத கவிதையை  செல்லரித்து போ
கையோடு ரேகையாகி ஆயுளை கம்மியாக்கி
மெல்லவே கொல்லவே திட்டம் தீட்டி போ போ

                 சரணம்-1
நான் குப்பைத் தொட்டியா ?
சொல்லி விட்டு போ ...
நான் குப்பைக்  கீரையா ?
கிள்ளி விட்டுப் போ ..
நான் கன்று குட்டியா ?
தடவி தந்துப்  போ ...
நான் குட்டி சுவரா ?
துப்பி விட்டுப்  போ ....
உள்ளத்தை உடைத்துப் போ
நெஞ்சத்தை நசுக்கி போ
ஏதேனும் செய்து விட்டுப் போ போ போ
பொல்லாப்பு பழித்துப் போ
கண்ணாலே கொளுத்திப் போ
ஏதேனும் செய்து விட்டு போ போ போ
சீ என்று சொன்னாலும் சீச்சீ னு சொன்னாலும்
உன் பாதம் சுற்றும் நாய்க்குட்டி நானென்று தெரிந்துப்  போ

            சரணம்-2  
நான் வித்தைக்காரனா ?
கை தட்டி விட்டுப்  போ
நான் மோசக்காரனா ?
திட்டி விட்டு போ
நான் வேசக்காரனா?
வெளுத்து விட்டுப் போ
நான் கோபக்காரனா ?
கத்தி விட்டுப் போ ...
கன்னத்தைக் கிள்ளிப் போ
கண்ணீரை துடைத்துப்  போ
ஏதேனும் செய்து விட்டுப் போ  போ போ
வெட்கத்தை சிந்திப் போ
வண்ணத்தை பூசிப் போ
ஏதேனும் தந்து விட்டுப் போ போ போ
நீயென்று சொன்னாலும் நீங்கன்னு சொன்னாலும்
உன்னோட வீட்டுக்காரன் நானென்று தெரிந்துப் போ ....



Thursday, November 24, 2016

                பல்லவி
மலராத மலரை காற்று முத்தமிட்டு திறக்கிறதே
நிரம்பாத அணையும் நேற்று நிரம்பி நிரம்பி வழிகிறதே
திறவாத  இதயத்தை காதல் தொட்டு தொட்டு திறக்கிறதே
குழம்பாத மனதும் இன்று குழம்பி குழம்பி தவிக்கின்றதே

               சரணம்-1
விழி வழியே நான் தொலைத்ததை விழிவழியே அவளெடுத்தாள்
வழிப்பறியில் பறிகொடுக்கவில்லை விழிப்பறியில் பறிகொடுத்தேன் ..
ஒரு மெலிய மேலாடை என்னை மூடி சென்றதை சொல்லவா
ஒரு நுண்ணிய பார்வை என்னை நோகடித்ததைச்  சொல்லவா
கண்களென்னும் தூரிகை வரைந்த ஓவியம் காதலா
பெண்மையென்னும் தேவதை தெய்வம் தந்த சாபமா
இடியும் மழையும்  இணைந்து   தாக்கும்
நீ சிரித்த நேரத்தில் ....
புயலும் வெயிலும் மாறித தாக்கும்
நீ கடந்த வேளையில் .......

                 சரணம்-2
துளிவிஷமே நான் அருந்தியது -அதை
சிறுசிரிப்பில் கரைய வைத்தாள்
கனிரசமே நான் நினைத்திருந்தேன்
மதுரசமென உணர வைத்தாள்
ஒரு துல்லிய தூறல் என்மேல் தூறி சென்றதை சொல்லவா
ஒரு மெல்லிய ஆசை என்னை ஆக்ரமித்ததை சொல்லவா
இளமையென்னும் வானிலே தோன்றும் வானவில் காதலே
காலமென்னும் மழையிலே காதல் கரைந்து போகுமோ
சனியும் விதியும் சேர்ந்து வந்தால்
நானும் என்ன செய்வேன்
கனத்த இதயம் உடைய பெண்ணே
உன்னை குற்றம் சொல்வேன்
                  பல்லவி 

இதுவரை இந்த இதயத்தில்
யாரும் நுழையவில்லை -அட
எதுவும் நிகழவில்லை .....
முதன்முறை உந்தன் சந்திப்பின்
தாக்கம் புரியவில்லை -ஏன்
தூக்கம் வரவுமில்லை ....
இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?

                      சரணம்-1

மெல்லிடையில் மேகலையா?
உன் நினைவை அல்லவா
குழந்தையாக சுமந்தேன்....

கண்ணிமையில் கருமணியா?
உன் உருவை அல்லவா
கண்ணுக்குள் வைத்தேன்......

கைகளின் ரேகையில் உன் பெயர் கலந்ததென்ன
கன்னத்தின் வெட்கத்தில் உன் நிறம் தெரிவதென்ன

நெஞ்சத்தின் துடிப்பினில் உன் பெயர் கேட்பதென்ன
என் பெயர் கேட்டால் உன் பெயர் சொல்வதென்ன

இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?

                     சரணம்-2

பூமனதில் பூகம்பமா?
உன் வருகையை அல்லவா
உவமையாக சொன்னேன் ..

மீன் விழியில் கலவரமா
உன் சிரிப்பை அல்லவா
தூண்டிலாக சொன்னேன் ....

நட்பின் போர்வையில் ஓர் கதிரவன் வந்ததென்ன
நெஞ்சின் ஆழத்தில் அவன் நுட்பமாக நுழைந்ததென்ன
உள்ளத்தின் உள்ளோர் வெள்ளப் பெருக்கு வந்ததென்ன
மௌனத்தின் அணையை சட்டென்று உடைத்ததென்ன

இது காதல் தானா
வெறும் உளறல்தானா
வீணாக போவது எந்தன் வயதா ?






Wednesday, November 23, 2016

ஆகாயத்திற்கு அடுத்த வீடு அதில் நீயும் நானும் சேர்ந்து வசிப்போமா
பூலோகத்திற்கு வட தெற்கு கிழக்கு மேற்கு இல்லாத திசையில் பறப்போமா
நிலத்தட்டு நகர்த்தி நீரோட்டம் கண்டு குளிப்போமா
சிறுமொட்டு தளர்த்தி உள் சென்று துயில் உறங்குவோமா
யாரும் இல்லாத இடத்தினிலே நாமும் வாழ்வோம்
யாரும் தீர்க்காத முறையினிலே காமம் தீர்ப்போம்

Tuesday, November 15, 2016

                    பல்லவி
காதல் பூதம் கடித்து தின்னுமா
குருதியைக் குடித்து சுவையை சொல்லுமா ?
காதல் பூதம் ரசிகன் ஆகுமா?
கவிதையை படித்து கருது சொல்லுமா?
மோதி விளையாடுமா - இல்லை
ஓடி விளையாடுமா?
வாமனனாக இருக்குமா- இல்லை
விஸ்வரூபம் எடுக்குமா?

                                  
                                            சரணம் -1
ஆறடி நீள நகங்களை வளர்த்து அருவெறுப்பாக இருக்குமா?
தீமிதி போல சுகங்களை எரித்து தகதகவென ஜொலிக்குமா?

கருநாகங்களை தாடியென தொங்கவிட்டு திரியுமா?
விஷ தேளினத்தை மீசையென சொல்லிக்கொண்டு அலையுமா?

இடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு கூத்தாடுமா ?
கருவாட்டு வீச்சத்தை வீசிக் கொண்டு தள்ளாடுமா?

உரசிடும் போதெல்லாம் வந்திடுமா ?
கேட்பதை எல்லாம் தந்திடுமா ?


                                        
                                           சரணம் -2
பேரிடிப் போல விரல்களை பதித்து நிலநடுக்கமாக பிளக்குமா ?
காளியை போல குடல்களை பிடுங்கி நார் நாராக கிழிக்குமா ?

கதிர் வீச்சுகளை பார்வையென பாயவிட்டு பார்க்குமா?
அதிர் வேட்டுக்களை ஏப்பமென விட்டு விட்டு ரசிக்குமா?

விளையாட்டு கோபத்தை காரணமாக்கி பந்தாடுமா?
மலையாட்டு கொம்பினை கூராய் தீட்டி பாய்ந்திடுமா?

ஆயிரம் கண்கள் இருந்திடுமா ?
ஆணவம் தலைவிரித்தாடிடுமா?

தேடி தேடி ஓடுகிறோம்
ஓடி ஓடி தேடுகிறோம்
தேடும் பொருளை தொலைத்துவிட்டு
ஏதோ  ஏதோ தேடுகிறோம் ............
தலையென நினைத்து வாலைப் பிடித்தோம் -பின்
வாலென உணர்ந்து தலையை பிடித்தோம்
பிடிக்கின்ற தலையெல்லாம் வாலென மாற
மண்ணில் பிள்ளையார் பிடித்த குரங்காகிப் போனோம்....
சிலர் சந்தோஷத்தில் சரக்கடிச்சி கும்மாளம்போட
பலர் துயரத்திலே சரக்கடிச்சி ஒப்பாரி பாட
சந்தோஷமோ துயரமோ சரக்குல இல்ல -அது
ரெண்டும் இருக்கு எல்லோரின் மனசுக்குள்ள
இது புரியாத முட்டா பசங்க
இங்க ரொம்ப இருக்காங்க -அட
என்று திருந்துவாங்க ?

Monday, November 14, 2016

                  பல்லவி
பேருந்து நிலைய தோழி
பேராவல் வந்தது தோழி
புன்னகை முகத்தில் பூவிதழ் சிரிப்பை
கொஞ்சம் சிந்தி விட்டு போடி ........
எத்தனை பாதங்கள் என்னை கடந்து சென்றது அறிவாயா ?
உந்தன் பாதங்கள் நெஞ்சை மிதித்து சென்றதை அறிவாயா?
எத்தனை வாசங்கள் என்னை ஊடுருவி சென்றது அறிவாயா?
உந்தன் வாசமே எந்தன் சுவாசம் நீயதை அறிந்தாயா?


                    சரணம்-1
எத்தனை பூக்கள் கூடையில் உள்ளது
நீ மட்டும் ஏனடி சாலையில் உள்ளாய்?
எத்தனை பெண்கள் எண்ணெயில் குளித்தனர்
நீ மட்டும் ஏனடி பன்னீரில் குளித்தாய் ?
நிலவொன்று பேருந்தில் வந்ததாய் சொன்னால் வீண் வாதம் வேண்டாம் ....
சிலையொன்று சாலையில் சென்றதாய் சொன்னால் சந்தேகம் வேண்டாம்.......
மாநகரத்தின் அழகியோ ?-இந்த
மாநிலத்திற்கே ஒருத்தியோ ?
வாலிபத்தின் புரட்சியோ ?-நீ
மன்மதனின் முயற்சியோ ?

                  சரணம்-2
எத்தனை நபர்கள் தேனீர் பருகினர்
நீ மட்டும் ஏனடி தேனை பருகினாய்?
எத்தனை நபர்கள் புகையை விட்டனர்
நீ மட்டும் ஏனடி புகைய வைக்கிறாய் ?
சிறுமின்சாரம் இவள் சிரிப்பினில் உள்ளது ஆராய்ச்சி வேண்டாம்...
இவள் என் தொகுதி, எனக்கே தகுதி, போட்டி போட வேண்டாம் ....
காமனவன் கிழத்தியோ -என்னை
காமுகனாக்கும் முயற்சியோ?
நாடி நரம்பு செயலிழப்போ -நீ
இதயங்களின் அதிர்ச்சியோ ?
                               பல்லவி
சிறுபிரிவொன்று கேட்டேன் பிரிவதற்கு முன்பே
பெரும்பிரிவை தந்தாய் ஏனடா ?
சுகபிரிவொன்று கேட்டேன் பெரும்துயரை  அன்றோ
நெஞ்சிலேற்றி வைத்தாய் நீயடா .....
பிரிவு சிறிய வலியல்ல பிரளயவலி
உனக்கு தந்து நானே பெற்றேன் பாரடா......


                                     சரணம்-1
நள்ளிரவு நிலவும் கண்கள் கசக்கும்வரை பேசிக்கொண்டிருந்தோம் -இன்றோ
தூக்கம் இல்லை நீயும் இல்லை
உடைந்து விழுந்ததே வெண்ணிலவு....

உடைந்த நிலவின் ஒவ்வொரு துண்டிலும் உடையாத உன்முகம்
புலரும் காலையில் சுருள்முடி மார்பினில் சாய்ந்தழ என்தவம்......

பாலை நிலத்தில் பயணம் போகும் வெண்ணிலவு -உடல்
களைத்து இளைக்கும் நெடுந்தொலைவு போல இவ்விரவு ....

ஆழக் கடலில் கரையை தேடும் சிறுபடகு-அது
அலைந்து அடையும் புல்தரையை போல உன்வரவு...

காதலின் சுவையை கண்ணீரில் அறிந்தேன்
இமைபொழுதும் இனி உன்னை பிரியேன்
பிரிவே பிரிவே பிரிவேன் உனையே.. ...

                                     சரணம்-2
நேற்றுவரை அலைபேசியில் விரல்ரேகை தேய்ந்தபோதும் கதைத்திருந்தோம்-ஒரு
ஸ்மைலியில்லை கடுப்பியில்லை
விழிநீரில் கன்னக்குழி நிறைகின்றதே ...

மெல்ல நிலவை விழுங்கும் இரவென தின்னும் உன்முகம்
கொள்ளை விரகக் கொடும்பகை வெல்ல இல்லை மனஉரம் ....

கோபக்குமிழிகள் உடைத்து போகும் பனி இரவு -உந்தன்
வெறுப்பு வார்த்தையை விரும்ப சொல்லுது என்செய்வேன்....

சினத்தை உமிழ்ந்து என்னை வதைத்த உன் உதடு-எந்தன்
முத்தம் வைத்து வைத்து திருந்த சொல்வேன் என்செய்வாய் ....

நாளையுன் விடியல் என்முத்ததில் துவங்கும்
மாலையின் முடிவில் நம் யுத்தத்தின் முடிவும்
பிரியேன் பிரியேன் இனிஉன்னை பிரியேன் .
                 ப்ல்லவி
மூச்சு காற்றை கடத்தினாயடி
என் நெஞ்சில் உன்னை நிரப்பினாயடி....
மூன்றாம் உலகம் காட்டினாயடி
புதுமனிதனாக மாற்றினாயடி.....
புதிராக இருந்தேனே -என்னை
எனக்கே அறிமுகம் செய்தாயே...
புதராக இருந்தேனே -புது
பாதை அமைத்தாயே....
அசுத்தம் நானடி -என்னை
தூய்மை ஆக்கினாய்........
தெய்வம் நீயடி -என்னை
இரட்சித்துக் கொள்கிறாய் .............
            
                 சரணம்-1
முள்ளின் நுனியில் பனித்தூறல் நீ
கண்ணி வெடி மேல் பட்டுபூச்சி நீ
போர்க்களம் தன்னில் பூத்த பூச்செடி
போர்வீரனை எளிதில் சாய்த்து விட்டதே......
புண்பட்டு கிடந்தேனே மருந்தாக வந்தாயே
துளைகண்ட இதயத்தில் வலி மறக்க செய்தாயே.....
சீல் பிடித்த செல்லோடு செல்லரித்து வீழ்ந்தேனே
புதுரத்தம் பாய்ச்சுகிறாய் உயிர் கொண்டு எழுந்தேனே....
நான் பாதகம் செய்திட பிறந்த படுபாவியடி
என்னை திருத்திட பிறந்த ஞானியும் நீ.......................

                        சரணம்-2
வாளின் விளிம்பில் வெள்ளை கொடியும் நீ
அம்பின் நுனியில் வெள்ளை பறவை நீ
புயலை வெல்லும் முல்லை அரும்பு நீ
பாலைவனத்தில் சிற்றோடை நீரும் நீ
இருள் சூழ்ந்து கிடக்கிறதே....
 எங்கு செல்லும் என் பாதை?
நிலவாக வந்தாயே......
வழிநடத்தி சென்றாயே......
மழை தூறல் விழுகின்றதே....
 எங்கு நானும் ஒதுங்கிடுவேன்?
முந்தானை குடை தந்தாய் ...
உன்னை நானும் வணங்கிடுவேன்...
நான் எங்கோ பிறந்து நடை பயின்ற காட்டு ஓடையடி
என்னை தடுக்கும் திறம் கொண்ட ஒரே அணையும் நீ ............................