Friday, August 22, 2025

வாடி வாடி மிருதுளா-



                    பல்லவி
வாடி வாடி மிருதுளா-அட
வெட்கம் என்ன இடைஞ்சலா
வாடி வாடி வெண்ணிலா-நான்
வாடிப்  போனேன் வத்தலா
பட்டாகத்தி கண்களால் என்  பட்டத்துராணி வெல்கிறாள்
பல்லாங்குழி கன்னத்தில் மனம் சரிய கண்டு ரசிக்கிறாள்
மருதாணி பூசிய விரலால் மனதை கிள்ளி போகின்றாள்

                சரணம்-1
என்ன சொல்வதோ உன்னை என்ன சொல்வதோ
சிரிப்பாலே ஆளை கொல்லும்
கொல்லிப்பாவை என்பதோ
கொல்லிப்பாவை என்பதோ

என்ன ஆவேனோ நானும் என்ன ஆவேனோ
உன்னாலே உலகை மறந்த
கிறுக்கன் ஆவேனோ-காதல்
கிறுக்கன் ஆவேனோ

பொல்லாத பார்வையாலே நெஞ்சை புண்படுத்தினாய்
சொல்லாத சொற்களாலே என்னை துன்புறுத்தினாய்
பொய்யான கோபம் காட்டி காயப்படுத்தினாய்
மெய்யான நேசத்தை ஏற்க ஏனோ மறுக்கின்றாய்

நெஞ்சத்தின் உள்ளேவந்து நஞ்சை தடவி போகின்றாய்

                   சரணம்-2
மச்சம் என்பதா இதை மச்சம் என்பதா
அழகான கோலத்தில் விடுபட்ட
புள்ளி என்பதா
புள்ளி என்பதா

சொர்க்கம் என்பதா இதை நரகம் என்பதா
திரிசங்கு சொர்க்கம் என்று
காதலை சொல்லவா –பொல்லா
காதலை சொல்லவா
ஐந்தடி அழகு சிற்பம் ஆளை கொல்லுதே
அய்யய்யோ அணுக்கள் எல்லாம் கூப்பாடு போடுதே
வெடிகுண்டு பார்வைகளை விழிகள் வீசுதே
இடிதாங்கும் இதயம் கூட தூளாகி போகுதே

உள்ளத்தின் உள்ளே வந்து காதல் சாரல் வீசுகிறாய்









Sunday, January 12, 2025

வேர்களை தேடி

வேர்களைத் தேடும் ஒரு பயணம்

 பூவே பூவே பயணம் போ

மழை மேகத்தை தேடும் நெடும் பயணம் 

மழை துளியே துளியே பயணம் போ

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

மலரெங்கே மலர்ந்தாலும் 

வேரில்தான் அதன் வரலாறே

வேர் தேடு வேர் தேடு வேரின் வேர் தேடு

வேர் தேடும் வழி எங்கும் புதையல் நூறுண்டு.

ஏதேதோ தேடும் வாழ்வில் 

அங்கங்கே தொலைந்து போவாய்

தன்னைத்தானே தேடும்போது

வேர்களிலே புதுவெளிச்சம் காண்பாய்

எங்கெங்கோ பறக்கும் பறவை

தாய்கூட்டை தேடித் திரும்பும்

எங்கெங்கோ வாழும் மனிதா

உன்வேர் தேடி துயிலும் கொள்வாய்

புல்லுக்கும் வேர் உண்டு

மரத்துக்கும்  வேர் உண்டு

புல்லா மரமா நீ யாரென்றால்

 உன் வேரில்தான் விடையுண்டு

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

விதை விண்ணை இடித்தாலும்

வேரில்தான் அதன் உயிருண்டு

வேர் தேடு வேர் தேடு 

வேரின் வேர் தேடு

வேர் தேடும் வழி எங்கும் 

திருப்பம் பலவுண்டு

போகாத பாதை தன்னில்

பாதம் செல்லும் பயணம் போதும்

கடந்து வந்த பாதையில் கொஞ்சம்

சுகமாக பயணம் செய்வோம்

வேர்தேடும் இந்த பயணம்

தாய்மடியை தேடும் பயணம்

ஆழ்கடலில் அமைதி கொள்ளும்

அலையாக புது உருவம் கொள்வோம்

வேர்போல தேடல் கொண்டு

உன்வேரை தேடல் நன்று

முகவரியில் ஒருவரி கிடைத்தாலும்

அதுவும் உந்தன் வரலாறு

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

விதை விண்ணை இடித்தாலும்

வேரில்தான் அதன் உயிருண்டு

வேர் தேடு வேர் தேடு 

வேரின் வேர் தேடு

வேர் தேடும் பயணத்தால்

திரும்பும் வரலாறு