Sunday, January 12, 2025

வேர்களை தேடி

வேர்களைத் தேடும் ஒரு பயணம்

 பூவே பூவே பயணம் போ

மழை மேகத்தை தேடும் நெடும் பயணம் 

மழை துளியே துளியே பயணம் போ

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

மலரெங்கே மலர்ந்தாலும் 

வேரில்தான் அதன் வரலாறே

வேர் தேடு வேர் தேடு வேரின் வேர் தேடு

வேர் தேடும் வழி எங்கும் புதையல் நூறுண்டு.

ஏதேதோ தேடும் வாழ்வில் 

அங்கங்கே தொலைந்து போவாய்

தன்னைத்தானே தேடும்போது

வேர்களிலே புதுவெளிச்சம் காண்பாய்

எங்கெங்கோ பறக்கும் பறவை

தாய்கூட்டை தேடித் திரும்பும்

எங்கெங்கோ வாழும் மனிதா

உன்வேர் தேடி துயிலும் கொள்வாய்

புல்லுக்கும் வேர் உண்டு

மரத்துக்கும்  வேர் உண்டு

புல்லா மரமா நீ யாரென்றால்

 உன் வேரில்தான் விடையுண்டு

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

விதை விண்ணை இடித்தாலும்

வேரில்தான் அதன் உயிருண்டு

வேர் தேடு வேர் தேடு 

வேரின் வேர் தேடு

வேர் தேடும் வழி எங்கும் 

திருப்பம் பலவுண்டு

போகாத பாதை தன்னில்

பாதம் செல்லும் பயணம் போதும்

கடந்து வந்த பாதையில் கொஞ்சம்

சுகமாக பயணம் செய்வோம்

வேர்தேடும் இந்த பயணம்

தாய்மடியை தேடும் பயணம்

ஆழ்கடலில் அமைதி கொள்ளும்

அலையாக புது உருவம் கொள்வோம்

வேர்போல தேடல் கொண்டு

உன்வேரை தேடல் நன்று

முகவரியில் ஒருவரி கிடைத்தாலும்

அதுவும் உந்தன் வரலாறு

நீ வாழும் வாழ்விங்கே 

வந்த தடம் எங்கெங்கே

விதை விண்ணை இடித்தாலும்

வேரில்தான் அதன் உயிருண்டு

வேர் தேடு வேர் தேடு 

வேரின் வேர் தேடு

வேர் தேடும் பயணத்தால்

திரும்பும் வரலாறு

No comments:

Post a Comment